33 கோடி ரூபாய்-குப்பைக் கிடங்கில்

குப்பைக் கிடங்கில் 33 கோடி ரூபாய்!
செம்மொழி மாநாட்டு அதிர்ச்சி!

சுதந்திர தின விழாவில் கொடியேற்றி வைத்து கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை சிலாகித்திருக்கிறார் முதல்வர்.

ஆனால், செம்மொழி மாநாட்டுக்காக 33 கோடி ரூபாயில் வாங்கப்பட்ட 60 நடமாடும் நவீனக் கழிவறைகள் குப்பைமேட்டில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்கள் கோவை மக்கள்.

உலக தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது சுகாதார சீர்கேடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, கோவை மாநகராட்சி சார்பில் நவீன நடமாடும் கழிவறைகள் வாங்க தீர்மானம் போடப்பட்டு, மும்பையை சேர்ந்த ‘விண்டோஸ் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திடம் இ-டெண்டர் மூலம் 33 கோடியே 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 60 நடமாடும் கழிவறைகள் வாங்கப்பட்டன.

இதில் 8 கழிவறைகள் மிகவும் நவீனமயமான கழிவறைகள். ஒன்றின் மதிப்பு 9 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய். இவை அனைத்தும் மாநாட்டு வளாகத்தில் மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டன.

அதே போல் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாநாட்டு வளாகத்தில் 10 கழிவறைகள் வைக்கப்பட்டன. இதன் ஒன்றின் மதிப்பு 6 லட்சத்து 36 ஆயிரத்து 600 ரூபாய். அதே மாநாட்டு வளாகத்தில் வெஸ்டர்ன் கழிவறைகள் 10 அமைக்கப்பட்டிருந்தன. இதன் ஒன்றின் மதிப்பு 6 லட்சத்து 35 ஆயிரத்து 600 ரூபாய்.

அவினாசி சாலையில் வைக்கப்பட்டிருந்த ஆண்களுக்கான 12 கழிவறைகளில் ஒன்றின் மதிப்பு 5 லட்சத்து 48 ஆயிரத்து 800 ரூபாய், அதே போல் பெண்களுக்காக வைக்கப்பட்டிருந்த 20 கழிவறைகளில் ஒன்றின் மதிப்பு 3 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய். மொத்தம் 60 நடமாடும் கழிவறைகள் 33 கோடியே 98 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது.

மாநாடு முடிந்த பிறகு, ‘இந்த கழிவறைகள் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயன்பாட்டுக்காக வைக்கப்படும்’ என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. ஆனால், மாநாடு முடிந்து இரண்டு மாதங்கள் ஆன பிறகும் இந்த நவீன நடமாடும் கழிவறைகளை கோவை மாநகரில் எங்கும் காண முடியவில்லை. மாநாட்டிற்கு பிறகு, இந்த கழிவறைகள் என்ன ஆனது என்பதை அறிய மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது சரியான பதில் இல்லை.

இந்நிலையில் இந்த அறுபது கழிவறைகளும் கோவையை அடுத்த வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருப்பதாக நமக்கு தெரிய வர, அதனை பார்வையிட சென்றோம். ஆனால், அங்கிருந்த காவலர்கள் நம்மை உள்ளே அனுமதிக்கவில்லை. எப்படியாவது உள்ளே சென்று அதன் நிலையை பார்த்துவிட வேண்டும் என்று இருந்த நிலையில்தான் கடந்த திங்கட்கிழமை, பேரூர் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி வெள்ளலூர் குப்பை கிடங்கில் உள்ள அந்த கழிவறைகளை பார்வையிடச் செல்கிறார் என்ற தகவல் நமக்கு கிடைக்க, அவருடன் நாமும் சென்றோம்.

33 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நவீன கழிவறைகள், வெள்ளலூர் குப்பை கிடங்கின் பின் பகுதியில் கிடந்தன.

அதனை பார்வையிட்ட வேலுமணியிடம் பேசினோம்.

‘‘இந்தக் கழிவறைகளை வாங்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்த போதே எங்கள் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி மும்பையை சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டது. ஒவ்வொரு கழிவறைகளும் லட்சக் கணக்கில் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மையான விலை இவ்வளவு அதிகமாக இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. இதில் பல கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக சந்தேகப்படுகிறோம். கோவையில் தற்போது பொது இடங்களில் தேவையான அளவுக்கு கழிவறைகள் இல்லை. அப்படி ஏதோ ஒரு சில இடத்தில் இருக்கும் கழிவறைகளும் சுகாதாரமாக இல்லை. அதிக மதிப்பில் டெண்டர் விடப்பட்டு குறைந்த செலவில் தரமற்ற நிலையில் கட்டப்பட்ட கழிவறைகளும் தற்போது தரைமட்டமாக உள்ளன.

செம்மொழி மாநாட்டிற்காக வாங்கப்பட்ட இந்த கழிவறைகள் எங்கே என கடந்த இரண்டு மாதமாகவே தேடி வந்தோம். தற்போது அவற்றைக் கண்டு பிடித்துவிட்டோம். இந்தக் கழிவறைகள் குறித்த அனைத்து தகவலையும் மாநகராட்சி வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் கோவை மாநகராட்சியை கண்டித்து கண்டன போராட்டங்கள் நடத்தப்படும்’’ என்றார் வேலுமணி.

இது குறித்து கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘எதுவாக இருந்தாலும் நேரில் வந்து பேசுங்கள்’’ என்றார். நாமும் அவரது அலுவலகத்துக்கு சென்றபோதெல்லாம் அவர் கிடைக்கவே இல்லை. கழிவறைகள் வாங்கியதில் ஊழல் நடந்ததோ இல்லையோ… இத்தனை ரூபாய் கொடுத்துவிட்டு அதை ஏன் குப்பைக் கிடங்கில் வீசவேண்டும் என்ற கேள்விக்கு கோவை வாசிகள் பதிலை எதிர்பார்க்கிறார்கள்.

மாநாட்டுக்குப் பிறகு கோவையின் உள்கட்டமைப்பு வசதி அதிகரிக்கும் என அரசு கொடுத்த வாக்குறுதியின் அர்த்தம் இதுதானா.00.?

This entry was posted in உலக தமிழ்ச் செம்மொழி மாநாட், கருணாநிதி, செம்மொழி, தி.மு.க. ஊழல், மு.க.ஸ்டாலின். Bookmark the permalink.

2 Responses to 33 கோடி ரூபாய்-குப்பைக் கிடங்கில்

  1. தேவப்ரியாஜி சொல்கிறார்:

    Proper Probe must be on all expenses of Maanadu is a must.

  2. பிங்குபாக்: நிர்வாணக் கோலத்தில் விளையாட்டு-திகிலூட்டும் அனுபவம் « கிறிஸ்தவம் பலானது

பின்னூட்டமொன்றை இடுக